கரோனா அதிகரிப்பதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற நாளை (09.04.2021) முதல் முன்பதிவு கட்டாயம் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குநனர் ராஜேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது தவிர்க்க இயலாததாகும்.
கரோனா தொற்று மருத்துவமனை மூலம் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் முன்பதிவு செய்து, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் வழங்கப்படும்.
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம். மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள் எப்போதும் போல எந்த முன்பதிவும் இன்றி தொடரும். இதற்கான தொலைபேசி எண்கள் பற்றிய விபரங்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் 'ஹலோ ஜிப்மர்' எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடன் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு அவர்கள் பதிவுசெய்துள்ள தொலைபேசி எண்ணில் மருத்துவர் தொடர்பு கொண்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பர்.
நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். அனைவருக்கும் முன் அனுமதிக்கான குறுஞ்செய்தி உறுதிசெய்த பின்னரே மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். நோயாளியுடன் ஒரு நபர் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்லலாம். மருத்துவமனை மூலம் கரோனா தொற்று பரவுவதை தவிர்க்க ஜிப்மர் மருத்துவமனையின் செயல்பாடுகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்” என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவு தவிர இதர பிரிவுகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. கரோனா அதிகரிப்பால் சிறப்பு பிரிவு மட்டுமே இன்று முதல் செயல்படும். மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை தொடரும். சுகாதார நலப் பணியாளர்கள், இதர நோயாளிகளுக்கும் கரோனா பரவலை தடுக்கவே இந்த நடைமுறை அமலாவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இனி முழுவதும் கரோனா சிகிச்சைக்காக இயங்க உள்ளது.