
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அண்மையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினைக் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், "அடுத்த சில நாட்களில் பஞ்சாப் தேர்தலுக்கு முன்பாக சத்யேந்தர் ஜெயினை (டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்) அமலாக்கத்துறை கைது செய்யப் போகிறது என எங்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு முன்புகூட சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக மத்திய அரசு சோதனை நடத்தியது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “தேர்தல்கள் நடக்க இருப்பதால், சோதனைகள், கைதுகள் ஆகியவை நடக்கும். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் இதுபோன்ற சோதனைகளுக்கும், கைதுகளுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கு முன்புகூட எனக்குச் சொந்தமான இடங்கள், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்குச் சொந்தமான இடங்கள், சத்யேந்தர் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.