மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதற்கிடையே உத்தரகாண்டில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான பாஜகவைச் சேர்ந்த திராத் சிங் ராவத், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது முதல்வர் பதவியைத் தொடர ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த நிலையில், உத்தரகாண்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில், மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மேற்குவங்கத்தில் கரோனா நிலை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. மக்களுக்கு வாக்களிக்கவும், சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கக் கூடாது என்பதால், தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.