கர்நாடகாவில் கோலார் பகுதியில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது. அங்கிருந்து அருகில் இருக்கும் அதன் மற்றொரு அலுவலகத்துக்கு சுமார் 1.64 கோடி மதிப்புள்ள பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்களை லாரி வழியாக அனுப்ப அந்நிறுவன அதிகாரிகள் முதலில் முடிவு செய்துள்ளனர். பொருட்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்த முடிவிலிருந்து மாறி பிறகு பெரிய அளவிலான கண்டெய்னர் லாரி உதவியுடன் பொருட்களை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் அலுவலகத்தில் குறிப்பிட்ட முகவரிக்குச் செல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த அவருக்குத் தெரிந்த காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வண்டியில் உள்ள பொருட்களை ஒரு கோடிக்கு விற்றுவிடலாம் என்று முடிவு செய்து அவருக்குத் தெரிந்த நபர்களிடம் இதுதொடர்பான தகவல்களைக் கூறியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வராத காரணத்தால் அமேசான் நிறுவனம் காவல்துறையினரிடம் புகார் செய்தது. இதனையடுத்து, தீவிர விசாரணை செய்த காவல்துறையினர், செல்ஃபோன் சிக்னல் மூலம் வண்டியைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.