கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் அதேபோல் ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்து அது தொடர்பாக கேரளாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியைச் சேர்ந்த நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி சட்டக்கல்லூரி மாணவி ஆவார். இந்த பெண்மணிக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று ஏன் விசாரிக்கவில்லை எனக் கேட்டுவிட்டு வீட்டுக்குச் சென்ற அவர் கதவை தாழ்பாள் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக அப்பெண்ணின் தந்தை புகார் எழுப்பியதை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் மக்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியினர் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியினரோடு பொதுமக்களும் நியாயம் கேட்டுக் கூடியதால் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீச்சி அடித்தும் போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலையவில்லை. அண்மையில் கேரளா மாநிலத்தில் அடுத்தடுத்து 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது அம்மாநிலத்தையே புரட்டியெடுத்தது. இதில் இளம் பெண்ணான விஸ்மயாவின் தற்கொலை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலையும் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.