ஒரே மாதத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 828 ரூபாயாக அதிகரித்துள்ளது.
உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்துகொள்ள எண்ணெய் நிறுவன கூட்டமைப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கேஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமல்லா எல்பிஜி சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் வழக்கமான நடைமுறையை மீறி 4- ஆம் தேதியன்று நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று 25 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 710- ல் இருந்து 735 ரூபாயாகவும், சேலத்தில் 728- ல் இருந்து 753 ரூபாயாகவும் அதிகரித்தது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இதன் விலை 719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அப்பாடா... இத்துடன் விலையேற்றம் முடிந்து போனது என்று நடுத்தர வர்க்கத்தினர் பெருமூச்சு விட்டிருந்த நிலையில், திடீரென்று பிப். 15- ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 753- ல் இருந்து 803 ரூபாயாக உயர்ந்தது. சென்னையில் 735- ல் இருந்து 785 ரூபாயாக அதிகரித்தது.
திடீர் திடீரென்ற கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக வியாழனன்று (பிப். 25) எல்பிஜி சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தால் சேலத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை 803- ல் இருந்து 828 ரூபாயாகவும், டெல்லி, மும்பையில் 794 ரூபாயாகவும், கொல்கத்தா நகரில் 820.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலையைக் கடந்த மாதத்தைக் காட்டிலும், பிப்.25- ஆம் தேதியன்று, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் பிப். 1- ஆம் தேதி, வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை தடாலடியாக 191 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டு தவணைகளில் மொத்தம் 24 ரூபாய் விலை குறைத்துள்ளனர்.
மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மூன்று தவணைகளில் மொத்தம் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து தரப்பு மக்களையும் பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது.