பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவாக பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகளின் உள் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தும் தி.மு.க.வின் இளைஞரணி அறக்கட்டளை அமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்குப் பரிசுகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறது.
இந்த வருடம் மாநிலத்தின் 32 மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரி மாணவிகளின் கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளை நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை நடத்தியது.
மூன்று பேர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தப் போட்டிக்காக மாநிலத்தில் மாணவ மாணவியர் தங்களின் பெற்றோருடன் பெரும் திரளாக வந்திருந்தனர்.
ஜனவரி 05 அன்று நடந்த தேர்வில் மூன்று வகைப் போட்டிகளிலும் முதல், இரண்டாம் மூன்றாம் பரிசுகளுக்காக தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 288. இதில் ஏற்கனவே மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் குறிப்பிட்ட அளவு தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஜனவரி 06 அன்று அவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு வழங்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல் பரிசாக 25,000, இரண்டாம் பரிசாக 15,000 மற்றும் மூன்றாம் பரிசாக 10,000 காசோலைகளும், சான்றிதழ்களும் வழங்கியவர். உங்களுக்கான திறமைகளை நீங்கள் இது போன்ற போட்டிகளின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில் திருவள்ளூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான 9-ம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரி என்ற மாணவி, பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பற்றிய பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியது ஒட்டு மொத்தப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.