உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த அகிலேஷ் யாதவ், தனது முடிவை மாற்றிக்கொண்டு, கர்ஹால் தொகுதியில் போட்டியிட உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க அனைத்து கட்சிகளும் பிற கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவதை தேர்தல் அஜெண்டாவாக முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பாஜகவை சேர்ந்த 3 மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அகிலேஷ் யாதவ் தன்னுடைய கட்சிக்கு கொண்டு வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக, முலாயம் சிங் யாதவின் மருமகள் அபரணதியை தங்கள் கட்சிக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக சமாஜ்வாதி கட்சிக்கு இந்தியாவின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங் (8.1 அடி) புதிய வரவாக அக்கட்சிக்கு வந்துள்ளார். தங்களுக்கு இது புது உற்சாகமாக இருப்பதாக அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.