மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு இணங்காததால், ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு அண்மையில் ரத்து செய்யப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்துக்கான சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த தளத்தில் பயனர்கள் இடும் பதிவுகளுக்கு, ட்விட்டர் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் அதுதொடர்பான இணைப்புகள் ட்விட்டர் தளத்தில் கிடைப்பதாகக் கூறி, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் கீழ் டெல்லி காவல்துறையின் சைபர் செல், போக்ஸோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் ட்விட்டர் நிறுவனத்துக்கு இது புதிய சிக்கலை உருவாகியுள்ளது.