டெல்லி ரோஹிணி கீழமை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். வழக்கு விசாரணைக்காகப் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகியை காவல்துறையினர், நீதிமன்றத்தில் நீதிபதி அறை 217- ல் ககன்தீப் சிங் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி முன்பாகவே, ரவுடி கோகியை எதிர்த்தரப்பு ரவுடிகள் சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து, ரவுடியைச் சுட்டுக் கொண்ட எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாகச் சுட்டுக் கொன்றனர். காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று ரவுடிகளில் இரண்டு பேர் வழக்கறிஞர்கள் உடையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த விவகாரம் தொடர்பாகக் கவலைத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், டெல்லி கீழமை நீதிமன்றங்களில் உரியப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். டெல்லி காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஹிணி கீழமை நீதிமன்றத்தின் நான்காவது முறையாகத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.