Skip to main content

"படைகுறைப்பே அமைதி திரும்ப வழி" - சீன அமைச்சரோடு வெளியுறவுத்துறை அமைச்சர் உரையாடல்

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

jaishankar

 

இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த வருடம் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட ஐந்து பேர், இந்த மோதலில் பலியானதாக சமீபத்தில் சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

 

இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன. அதன்பிறகு மற்ற பகுதிகளில் படைகளைக் குறைப்பது மற்றும் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் நேற்று (25.02.2021) தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 75 நிமிடம் நீடித்த இந்த தொலைபேசி உரையாடலில், இருவரும் இந்திய - சீன எல்லைப் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளனர்.

 

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஆண்டிலிருந்து இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். எல்லை குறித்த கேள்வி தீர்க்கப்பட நேரமெடுக்கலாம். ஆனால் வன்முறை உள்ளிட்டவற்றால் அமைதிக்கு இடையூறு ஏற்படுவது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், தவிர்க்கமுடியாத மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாங்காங் ஏரி பகுதியில் படைவிலகலைக் குறிப்பிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர், எல்லையில் படைகளைக் குறைப்பதற்கு, மோதல் புள்ளிகளிலிருந்து படைகளை விலக்குவது முக்கியம். படைகுறைப்பே எல்லையில் அமைதி திரும்புவதற்கும், இருநாட்டு உறவில் வளர்ச்சி ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்’ எனக் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்