கடந்த 2015ஆம் ஆண்டு கேரள மாநில சட்டமன்றத்தில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்றத்தில் இருந்த நாற்காலிகள், மைக்குகள் போன்றவற்றைச் சேதப்படுத்தினர். இது தொடர்பாக, அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வழக்குகளை ரத்து செய்ய அனுமதி கோரி திருவனந்தப்புரம் மாஜிஸ்ட்ரேட்டிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மாஜிஸ்டிரேட் மறுத்துவிட்டார். அதற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
பின்னர், இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் இன்று (28/07/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கருத்துச் சுதந்திரம் அல்ல. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு என்பது தடையின்றி தொடர்ந்து பணி செய்ய மட்டும்தான். கிரிமினல் விவகாரங்களில் ஈடுபடும்போது அவற்றிலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.