இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களோடு பிரதமர் மோடி, நேற்று (08.04.2021) ஆலோசனையும் நடத்தினார். ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து மூன்றாவது நாளாக 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஹாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,286 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மஹாராஷ்ட்ரா மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 10,662 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 8,490 பேருக்கும், டெல்லியில் 7,437 பேருக்கும், கர்நாடகாவில் 6,570 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இம்மாநிலங்களில், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.