Skip to main content

கோவாக்சின் குறித்த முடிவை தள்ளிவைத்த WHO - காரணம் என்ன? 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

WORLD HEALTH ORGANISATION

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது.

 

இதனைத்தொடர்ந்து, கடந்த ஐந்தாம் தேதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று (26.10.2021), உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூடி கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியது.

 

இதனால் நேற்றே கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பது தொடர்பான தனது முடிவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் செய்திதொடர்பாளரும், அனைத்தும் சரியாக அமைந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியிருந்தார்.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன், நேற்று கூடிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக அதன் தயாரிப்பாளரான பாரத் பையோடெக்கிடம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அந்த தரவுகள் விரைவில் தரப்பட்டால் நவம்பர் 3ஆம் தேதி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மீண்டும் கூடி கோவாக்சினுக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆராய உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்