Skip to main content

“ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பிரதமராக வரக்கூடிய நாடு இது” - மத்திய அமைச்சர் பேச்சு!

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
This country where person born  poor family can become  PM of country Minister speech

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்திய மக்களாகிய நாம் 26 நவம்பர் 1949 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மக்களவைக்கும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மனதார எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நமது அரசியலமைப்பு வழி வகுக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை ஒரு குறிப்பிட்ட கட்சி அபகரிக்கும் முயற்சி எப்போதும் இருந்து வருகிறது. இன்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், நமது அரசியலமைப்பு ஒரு தனிக் கட்சியின் பரிசு அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களால், இந்தியாவின் விழுமியங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசு இந்திய அரசியலமைப்பில் எழுதப்பட்ட தர்மத்தின்படி செயல்படுகிறது. நமது அரசியலமைப்பு முற்போக்கானது, உள்ளடக்கியது, மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் நாட்டின் பிரதமராகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் வரக்கூடிய நாடு இது” எனப் பேசினார்.

இது தொடர்பாக பாஜக எம்பி தினேஷ் சர்மா செய்தியாளரிடம் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு மிகவும் வலுவானது ஆகும். அதனை அப்படியே பின்பற்றியிருந்தால், இன்று இருக்கும் வகுப்புவாதம், பிரிவினைவாதம், ஜாதிவாதம் போன்ற உணர்வுகள் தழைத்திருக்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் காங்கிரஸ் எத்தனையோ மாற்றங்களைச் செய்தது. இருப்பினும் அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” எனக் கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதா மீது விவாதம் நடைபெற இருப்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் இன்றும் (13.12.2024), நாளையும் (14.12.2024) நாடாளுமன்றத்திற்குக் கட்டாயம் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்