வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஊரடங்கில் செலுத்தாத தவணையின் வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று (03/09/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பதில் மனுவில், வங்கி கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை இ.எம்.ஐ. கட்டாதோர் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனில், அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.