தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு 09.00 மணி முதல் காலை 05.00 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அரசியல் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்குத் தடை விதித்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் நீச்சல் குளங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ஏப்ரல் 09 முதல் 19- ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10 நாள் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.