இந்தியாவில் 'ஒமிக்ரான்' வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், 'ஒமிக்ரான்' பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. டெல்லி, அசாம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 25- ஆம் தேதி அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். அதேபோல், முன்களப் பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்; எனினும் மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கோவின் தளத்தின் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா, "15 முதல் 18 வயது சிறார்கள் கோவாக்சின் கரோனா தடுப்பூசி போட CoWIN செயலி அல்லது இணையதளம் மூலம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் 10-ஆம் வகுப்பு ஐ.டி.கார்டைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.