இந்தியாவில் கரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கரோனா, பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கரோனாவின் முதல் அலையினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் குறித்து பெங்களூரில் அமைந்துள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியோடு முடிவடைந்த அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆய்வின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 20 சதவீத இந்தியக் குடும்பங்கள் தங்களது மொத்த வருவாயையும் இழந்துள்ளன. மேலும் குறைந்தபட்ச ஊதிய அளவைவிட, குறைவாக ஊதியம் வாங்குபவர்கள் எண்ணிக்கையில் மேலும் 23 கோடி பேர் இணைந்துள்ளனர்.
மேலும் ஒருவேளை இந்தப் பெருந்தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால், கிராமப்புறங்களில் ஏழ்மை நிலை 5 சதவீதமும், நகர்ப்புறங்களில் 1.5 சதவீதமும் குறைந்திருக்கும் என அந்த ஆய்வு கூறுகிறது. முதல் அலையே 23 கோடி பேரை வறுமையில் தள்ளியதாக ஆய்வு கூறும் நிலையில், முதல் அலையைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்திவரும் இரண்டாவது அலை, எத்தனை ஏழைகளை வறுமைக்கு விருந்தாக்கப்போகிறதோ எனும் கவலை மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.