நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத்தும் மேலும் 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 15.12.2021 அன்று அவர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த விபத்து தொடர்பாக ராணுவம் விசாரித்து உண்மையை அறிவிக்கும்வரை யூகங்களை தவிர்க்கும்படி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, 'திடீரென உருவான மேகக் கூட்டங்களுக்குள் நுழைந்ததால் தலைமை தளபதி பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது' என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மனவேந்தர் சிங் தலைமையிலான நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் புகுந்தபோது திடீரென மேகக்கூட்டம் உருவான நிலையில் விமானி ஹெலிகாப்டரை திருப்ப தவற விட்டிருக்கிறார். இதன் காரணமாகத்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.