Controversy over IBPS announcement!

Advertisment

தமிழகத்தில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS- யின் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisment

வங்கிகளில் கிளார்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் சுமார் 400 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த அகில இந்திய ஓரியண்டல் ஃபேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ஜி. கருணாநிதி, தமிழகத்தில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2022- 2023 ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 விழுக்காட்டுக்கு மேல் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரிய வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு கை காட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது.

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தவர்கள் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும். அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களை தகுதி நீக்கம் செய்யாமல் கூடுதலாக மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.