பிரதமர் மோடி உட்பட பாஜகவை சேர்ந்த சில மத்திய அமைச்சர்களின் கல்வித்தகுதி ஏற்கனவே சர்ச்சையான நிலையில், தற்போது மத்திய உள்துறை இணையமைச்சராக கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற நிசித் பிரமானிக்கும் கல்வி தகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற நிசித் பிரமானிக், மக்களவை உறுப்பினர் பதவியை தக்கவைத்துக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த சட்டமன்ற தேர்தலிலும், 2019 மக்களவை தேர்தலிலும் தான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் மக்களவை இணையதளத்தில் நிசித் பிரமானிக், பி.சி.ஏ பட்டப்படிப்பு (BCA) படித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் இதனை சுட்டிக்காட்டவும், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையாகியுள்ளது.
இந்தவிவகாரம் குறித்து மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நிசித் பிரமானிக்கிடம் போட்டியிட்டு தோற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ உதயன் குஹா, "மார்ச் மாதம் வரை அவரது அதிகபட்ச கல்வித்தகுதி 12 வகுப்பு தேர்வை எழுதியிருப்பது. அதில் தேர்ச்சியடைந்தாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. 12 வகுப்பில் தேர்ச்சி பெறாமல் ஒருவர் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்" என கேள்வியெழுப்பியுள்ளார்.
நிசித் பிரமானிக், பாலகுரா ஜூனியர் பேசிக் ஸ்கூலில் பட்டம் பெற்றிருப்பதாக மக்களவை இணையதளத்தில் கூறப்பட்டிருக்கும் நிலையில், பாலகுரா ஜூனியர் பேசிக் ஸ்கூல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் எனவும் உதயன் குஹா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேற்குவங்க பாஜக தலைவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் குறித்து நிசித் பிரமானியே பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.