பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் வரும் போது, அவரை வரவேற்காமல் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்றுள்ளதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மாலை (26/05/2022) அங்கு வரவிருக்கிறார். இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்றுள்ளார். பிரதமர் வரவேற்பதைத் தவிர்ப்பதற்காக முதலமைச்சர் பெங்களூரு சென்றுவிட்டதாகவும், இந்த பயணத்தை அவர் தள்ளி வைத்திருக்கலாம் என்றும் தெலங்கானா மாநில பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா வந்தபோதும், பிரதமரை வரவேற்க முதலமைச்சர் செல்லவில்லை என்றும் அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
அண்மைக் காலமாகவே, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகரராவ் முனைப்பு காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.