
மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி மாநில சட்டப்பேரவை. இதில் மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். நேற்று காலை வரை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வந்தது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். திமுக எம்எல்ஏ ஒருவரும் நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், விரைவில் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.