
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் குரப்பா நாயுடு. இவர் தியாகராஜ நகரில் உள்ள பிஜிஎஸ் ஃபீல்டு பள்ளியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில், பள்ளி ஆசிரியை ஒருவர், குரப்பா நாயுடு மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு வரை அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த 38 வயது பெண் ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குரப்பா நாயுடு மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், குரப்பா நாயுடு பலமுறை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை எதிர்த்த போது, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது போன்ற நிறைய பெண் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்களை வைத்து மிரட்டி அவர்களை அமைதிப்படுத்தியுள்ளார்.
நிறைய பெண்கள் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் முன்வர பயப்படுகிறார்கள். எனது தாய் கொடுத்த நம்பிக்கையின் பேரின் அந்த வேலையை விட்டுவிட்டேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சன்னம்மனகெரே அச்சுகாட்டு காவல்துறையினர், குரப்பா நாயுடு மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.