பஞ்சாப், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கான அதிகார வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு (பி.எஸ்.எஃப்) அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சர்வதேச எல்லையிலிருந்து மாநிலங்களுக்குள் 15 கிலோமீட்டர் வரை என்ற எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய உள்துறை அமைச்சகம் 50 கிலோமீட்டராக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், சர்வதேச எல்லையிலிருந்து அம்மாநிலங்களுக்குள் 50 கிலோமீட்டர் பகுதி வரை எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்தல் மற்றும் சோதனையிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ‘எல்லைப் பாதுகாப்பு படையின் செயல்திறனை மேம்படுத்தவும்’ மற்றும் ‘கடத்தல் மோசடிகளை ஒடுக்கவும்’ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "சர்வதேச எல்லைகளில் 50 கி.மீ. வரம்புக்குள் எல்லைப் பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். விவேகமற்ற இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மேற்கு வங்க அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், "சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்திற்கு உரித்தானது. ஆனால், இதில் மத்திய அரசு மத்திய நிறுவனங்கள் மூலம் தலையிட முயற்சிக்கிறது" என கூறியுள்ளார். பாஜக ஆளும் அசாம் மாநில முதல்வர் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இதனிடையே எல்லை பாதுகாப்பு படை, “அதிகார வரம்பு நீட்டிப்பு, எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்படக் கட்டுப்படுத்த உதவும்" என விளக்கமளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தப் புதிய உத்தரவின்படி, குஜராத்தில் 80 கிலோமீட்டராக இருந்த எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு, 50 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் மொத்த பகுதியும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பிற்குள் வரும் நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.