பாலிவுட் நடிகர் திலீப் குமார் (98) உடல்நலக் குறைவால் காலமானார். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், திலீப் குமார் மும்பையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1922இல் பெஷாவரில் (தற்போது உள்ள பாகிஸ்தானில்) பிறந்த திலீப் குமாரின் இயற்பெயர் முகம்மது யூசுப்கான். இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994இல் பெற்றவர் நடிகர் திலீப் குமார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த திலீப்குமார் பாலிவுட்டின் முக்கியமான திரை நட்சத்திரம். தற்போது பாலிவுட் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோருக்குப் பிதாமகனாக இருந்தவர் திலீப் குமார்.
நடிகர் திலீப் குமாரின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு இர்ஃபான் கான் உள்ளிட்ட முக்கியமான பாலிவுட் நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.