வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஜம்மு காஷ்மீரில் அதிக அளவில் தேசியக் கொடிகளை ஏற்ற திட்டமிட்டுள்ள அம்மாநில பாஜகவினர் அதற்காக கட்சி தொண்டர்களுக்கு சுமார் 50,000 தேசியக் கொடிகளை விநியோகிக்க முடிவு செய்துள்ளனர்.
அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், வரும் அக் 31 ஆம் தேதி அந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் சுந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அம்மாநில பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அன்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் திரும்பும் இடமெல்லாம் மூவர்ண தேசியக் கொடியாக காட்சி அளிக்கும் வகையில் தேசிய கொடிகளை வினியோகிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேசிய கொடியை விநியோகிக்கும் பணிகளில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா ஈடுபட்டுள்ளார்.
பாஜக அலுவலகத்தில் கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தேசிய கொடிகளை வழங்கி வருகிறார். இதற்காக பருத்தி மற்றும் பட்டுத் துணிகளால் ஆன 25 ஆயிரம் தேசியக் கொடிகளை வாங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15 கொண்டாட்டத்திற்கான தினம் என குறிப்பிட்டுள்ளார். தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. மேலும் சுதந்திர தினத்தன்று ஜம்மு காஷ்மீரில் மோட்டார் சைக்கிள் பேரணி போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.