
இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என கூறிவருகிறார்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் ஜஸ்ரானாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கரோனா பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருத்துவமனையில் போதுமான உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், மேலும் தனது மனைவி மூன்று மணி நேரம் தரையில் படுக்கவைக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, "எனது மனைவி முதலில் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவமனையின் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு நான் ஆக்ராவின் மாவட்ட மாஜிஸ்திரேட்டை தொடர்புகொண்டேன். அவர் எனது மனைவிக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கி தந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை குறித்து தகவல் இல்லை. மருத்துவமனையில் உள்ள யாரையும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை" என கூறியுள்ளார்.
தற்போதுதான் தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளதாகவும், தனது உடல்நிலை பலவீனமாக இருப்பதால் ஆக்ராவரை சென்று பார்க்க முடியவில்லை என கூறியுள்ள எம்.எல்.ஏ ராம்கோபால் லோதி, ஒரு எம்.எல்.ஏ மனைவிக்கே சரியான கவனிப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் இந்தக் குற்றசாட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் அவல நிலையைக் கூறுவதாக அமைந்துள்ளது.