அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள, பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், மாநில கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவதும், “கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. நம் முன்னோர்கள் தான் கண்டுபிடித்தார்கள். கொலம்பஸுக்குப் பிறகு, இயற்கையை வழிபடுபவர்களாகவும், சூரியனை வணங்குபவர்களாகவும் இருந்த அமெரிக்காவின் பழங்குடியின மக்கள் மீது எவ்வளவு சுரண்டல் மற்றும் அழிவு ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பெரும் வன்முறைக்கும், அழிவுக்கும் ஆளானார்கள். துரதிர்ஷ்டவசமாக, சரியான உண்மைகள் கற்பிக்கப்படவில்லை. மாறாக, கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று மாணவர்களுக்கு தவறாகக் கற்பிக்கப்படுகிறார்கள்.
8 ஆம் நூற்றாண்டில் இந்திய கடற்படை வீரர் வாசுலுன், அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். இது அவர்களின் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் இன்னும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஒருவர் கற்பிக்க வேண்டும் என்றால், அது இந்தியாவால் கண்டுபிடிக்கப்பட்டது, நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, கொலம்பஸால் அல்ல என்று கற்பிக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை என்று மத்திய பிரேதச மாநில கல்வி அமைச்சர் பேசியது, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.