உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே யோகி ஆதித்யாநாத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில்,சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக உத்தரப்பிரதேச தேர்தல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
இந்தநிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் ஜேபி நட்டா, அப்னா தளம், நிஷாத் ஆகிய கட்சிகளோடு இணைந்தது 403 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அறிவித்துள்ளார்.