உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டப் பிறகு, விஞ்ஞானிகள் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம், இந்தியாவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்தார். தற்போது உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து, அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் தலைமையைப் பார்க்கச் சிறப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "உலகம், கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர உழைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தடுப்பூசி உற்பத்தித் திறனிலும் இந்தியாவின் தலைமையைக் காண்பதற்கு சிறப்பாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பில்கேட்ஸ் இந்த ட்வீட்டில் இந்திய பிரதமர் மோடியை டேக் (tag) செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.