Skip to main content

கோவிஷீல்ட் அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறதா? - ஆய்வை விமர்சிக்கும் பாரத் பையோடெக்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

bhrat biotech

 

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ஆய்வு கோவக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதாக தெரிவித்தது. இதையடுத்து அந்த ஆய்வில் பல குறைகள் இருப்பதாக கோவாக்சினை தாயரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

 

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் ஒப்பீட்டு அறிக்கையில் நிறைய குறைகள் இருந்தன. அது (நிபுணர்களால்) மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடு அல்ல. புள்ளிவிவர ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட ஆய்வு அல்ல. ஆய்வு வடிவமைப்பு மற்றும் நடத்தப்பட்ட விதம், முன்னரே தீர்மானிக்கப்பட்ட கருதுகோளைக் காட்டிலும் தற்காலிக பகுப்பாய்வைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்த ஆய்வு கிளினிக்கல் ட்ரையல் ரெஜிஸ்ட்ரி இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துகளுக்கான மத்திய நிலை கட்டுப்பாட்டு அமைப்போ, தடுப்பூசிக்கான நிபுணர் குழுவோ இந்த ஆய்வை அங்கீகரிக்கவில்லை" என கூறியுள்ளது.

 

மேலும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படுமென்றும், மூன்றாவது கட்ட சோதனை தரவுகள் வெளியானவுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கு முழுமையான உரிமம் கோரி விண்ணப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்குத் தற்போதுவரை அவசரகால அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்