
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம் பத்தனம்திட்டா மல்லப் பள்ளியைச் சேர்ந்தவர் மரியம்மா (95) இவருடைய கணவா் போதகரான மாத்யூ வா்க்கீஸ் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த மரியம்மா தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். பிள்ளைகள், மருமகள், பேரப்பிள்ளைகள் என எல்லோரும் வெளி நாடுகளிலும் கேரளாவின் பல பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இதில் மரியம்மாவின் தம்பி ஒருவா் கா்நாடகாவில் பிஷப் ஆக உள்ளார்.
அதே போல் மூத்த மகன் ஜார்ஜ் உம்மன் பாலாவில் பாதிரியராகவும், மருமகன் ஒருவா் பாதிரியராகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டாக மரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் நா்ஸ் ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இறந்த மரியம்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முன் மரியம்மாவின் இறந்த உடல் கண்ணாடி ஃப்ரிசரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடலை பார்த்து மக்களோ, மருமகளோ, பேரப்பிள்ளைகளோ என ஒருத்தர் கூட அழாமல் எல்லோரும் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் உடலைச் சுற்றி இருந்து கொண்டு அத்தனை பேரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனா். இதைப் பார்த்த பலரும் பல விதத்தில் பேசத் தொடங்கினார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த மரியம்மாவின் மூத்த மகன் ஜார்ஜ் உம்மன், “அம்மா இறப்பதற்கு இரண்டு நாளுக்கு முன்னே எல்லோரும் வந்து விட்டோம். அம்மா உயிரோடு இருக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தோமோ அதே போல் அவரை வழியனுப்பும் போது சந்தோஷமாக தான் இருக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு அந்த உணா்வை தான் நாங்கள் வெளிப்படுத்தினோம். இது பற்றிய மற்றவர்களின் கருத்து குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை” என்றார்.
இந்த நிலையில் இந்த போட்டோ வைரலானதையடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையான கருத்தும் எழுந்துள்ளன. இந்த சூழலில் கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூலில் அந்த போட்டோவை பகிர்ந்து, ‘மரணம் வாழ்வில் இறுதியான ஒன்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தவா்களுக்கு புன்சிரிப்போடு ஒரு வழியனுப்புதல் செய்வதை விடச் சந்தோஷம் எதுவும் இல்லை’ என்று பதிவு செய்து இருக்கிறார்.