தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்தப் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு பயணிகள் வர தடை விதித்துள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது.
இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய (கரோனா) திரிபால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களை நிறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, நம் நாடு கரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இந்தப் புதிய திரிபு இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க சாத்தியமான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.