சமூகவலைதளங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் மோதல் வெடித்துள்ளது. புதிய விதிமுறைகளை ஏற்காததால், ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, அவரது சொந்த ட்விட்டர் கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் ஒருமணி நேரம் அனுமதி மறுத்தது. ரவி சங்கர் பிரசாத் பகிர்ந்த பதிவு ஒன்று காப்புரிமையை மீறுவதாக அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமைச் சட்டத்தின்கீழ் புகார் வந்ததையடுத்து, இந்த நடவடிக்கையை எடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில் "முன் அறிவிப்பின்றி எனது சொந்த கணக்கை அணுக ட்விட்டர் நிறுவனம் அனுமதி மறுத்தது, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் 2021இன் விதிகளை மீறும் செயல்" என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததோடு, ட்விட்டர் நிறுவனத்தையும் விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் ‘மா துஜே சலாம்’ (தாய் மண்ணே வணக்கம்) பாடலுடன் பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மனிகன்ட்ரோல் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், லுமேன் தரவுத்தளத்தை (lumen database) ஆய்வுசெய்ததில், சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் சார்பாக சர்வதேச ஒலிப்பியல் தொழில் கூட்டமைப்பு, ‘மா துஜே சலாம்’ பாடல் பகிர்வு தொடர்பான காப்புரிமை புகாரை ஜூன் 24 அன்று அளித்ததாகவும், அதனைத் தொடர்ந்தே ட்விட்டர், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் கணக்கை முடக்கியதாகவும் கூறியுள்ளது.
லுமேன் தரவுத்தளம், இணையத்தில் உள்ளவற்றை அகற்றக் கோரும் சட்டப்பூர்வ புகார்களைச் சேகரித்து, அதைப் பகுப்பாய்வு செய்யும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.