ஆந்திர மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக, சித்தூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ள பெண்ணின் கணவருக்குச் சொந்தமான டீக்கடை ஒன்று, மாநகராட்சி அதிகாரிகளால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு இவ்வாறு அழுத்தமளித்து தேர்தலில் இருந்து விலகும் முடிவை எடுக்க வைப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ள தெலுங்கு தேசம், அதனைக் கண்டிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டத்தை அறிவித்தது.
இந்தப் போராட்டத்திற்கு உள்ளூர் போலீஸார், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது மற்றும் கரோனா பரவல் தாக்கம் போன்ற காரணத்தால் அனுமதி தர மறுத்தனர். இருப்பினும் சந்திரபாபு நாயுடு, தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார். அவரை திருப்பதி விமான நிலையத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடு, “நான் மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் பார்க்க வேண்டும்” என்றார். அதற்கும் ஆந்திர காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை.
இதனையடுத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், விமான நிலையத்திலிருந்தே தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர், "என்ன இது? மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க எனக்கு அடிப்படை உரிமைகள் இல்லையா? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? நான் முதல்வராக 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். நான் எதிர்க்கட்சித் தலைவர். என்னை ஏன் தடுக்கிறீர்கள். நீங்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. நான் இங்கேயே உட்கார்ந்துகொள்வேன்" என கேள்வி எழுப்பி தர்ணாவில் அமர்ந்தார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சந்திரபாபு நாயுடு தலைமையில் போராட்டம் நடப்பதைத் தடுக்கும் விதமாக, ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தெலுங்கு தேச கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.