Skip to main content

அப்பாவி மக்களை பாதுகாப்புப் படை கொன்றது ஏன்? - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்!

 

AMIT SHAH

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதே நேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி விளக்கம் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். 

 

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓட்டிங்கில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது ஆனால் அது தப்பிச் செல்ல முயன்றது. இதனால் அது தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


காரில் பயணம் செய்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் தவறாக (தீவிரவாதிகள்) அடையாளம் காணப்பட்டது பின்னர் கண்டறியப்பட்டது. காயமடைந்த மேலும் 2 பேரை ராணுவத்தினர் அருகில் உள்ள சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், உள்ளூர் கிராம மக்கள் ராணுவப் பிரிவைச் சுற்றி வளைத்து, 2 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர் இதன் விளைவாக, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து தற்காப்புக்காகவும் கூட்டத்தைக் கலைக்கவும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால் மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயன்றனர்.

 

இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. தற்போது போலீசார் இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். சிறப்பு விசாரணை குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும். . இராணுவம் தனியாக அறிக்கை அளித்துள்ளது.  அதில் அவர்கள் பொதுமக்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்கள் நேற்றைய நாள் முழுவதும் நிலைமையை மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணித்தோம். தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உயிரிழப்புக்கு மத்திய அரசு மிகவும் வருந்துகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, டிசம்பர் 5 மாலை, சுமார் 250 பேர் கொண்ட ஆத்திரமான கூட்டம், மோன் நகரில் உள்ள அசாம் ரைபிள்ஸின் செயல்பாட்டுத் தளத்தை சேதப்படுத்தி கட்டிடத்திற்கு தீ வைத்தது. கூட்டத்தை கலைக்க அசாம் ரைபிள்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால் மேலும் ஒரு குடிமகன் உயிரிழந்தார்.

 

பாதிக்கப்பட்ட பகுதியில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இராணுவம் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரை தொடர்பு கொண்டேன். மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலாளரையும் டிஜிபியையும் தொடர்பு கொண்டது. மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக வடகிழக்கு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் கூடுதல் செயலாளரை கோஹிமாவுக்கு அனுப்பியது. அங்கு அவர் இன்று தலைமைச் செயலாளர், பிற மூத்த அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். நிலைமை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வாறான  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அனைத்து படைகளும் உறுதி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசு நுணுக்கமாக கண்காணித்து வருகிறது மற்றும் அப்பகுதியில் அமைதியை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

 

இதனிடையே அமித் ஷாவின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.