அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை (24/02/2020) இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் வருகிறார். பிப்.24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தாஜ்மஹால், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளை அகமதாபாத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை ட்ரம்ப் தொடங்கி வைத்து எங்களுடன் இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார்.