உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச்சூழலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நேற்று அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப்பிரதேச பொறுப்பாளரும் எம்.பியுமான சஞ்சய் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அகிலேஷ் யாதவ் தங்களது சந்திப்பை மாற்றத்திற்கான சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் சஞ்சய் சிங், அகிலேஷ் யாதவுடனான ஆக்கப்பூர்வமான சந்திப்பில், பொது பிரச்சனைகளும், பாஜகவின் தவறான நிர்வாகத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தை விடுவிப்பதற்கான உத்தியை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு கட்சிகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அகிலேஷ் யாதவ் நேற்று, அப்னா தளம் (கே) கட்சி தலைவர் கிருஷ்ணா படேலை சந்தித்து ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.