நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. இதனையேற்று, விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய அமைச்சரவையைக் கூட்டி, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான ஒப்புதலை மோடி பெற்றார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரிடமும் 25-ந் தேதி ஆலோசனை நடத்தினார் சோனியா காந்தி.
இந்த ஆலோசனையில், குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி சபையில் குரல் எழுப்ப வேண்டும் எனத் தீர்மானித்தனர். மேலும், காங்கிரஸ் எழுப்பும் பிரச்சனைகளுக்கு எதிர்க்கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெறுவது குறித்தும் சோனியா விவாதித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவைக் கூட்டத்தின் முதல் நாளிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவது என்றும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் தனி சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தவிர, கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதை வலியுறுத்தவும் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் சபாநாயகர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கவும் காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. தங்களைப் போல எதிர்க் கட்சிகள் அனைத்தும் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்டுகள், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகோள் வைத்திருக்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனகார்கே.