'புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக கடந்த 5ஆம், தேதி வெளியாகியிருக்கும் படம் புஷ்பா 2 - தி ரூல். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.922 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்து வருகிறது. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு அல்லு அர்ஜூன் சென்ற நிலையில் அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்ததால் அதில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக புஷ்பா 2 படக்குழு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் இழப்பீடு தரவுள்ளதாக உத்தரவாதம் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழு மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தெலங்கானா அரசு வரும் காலங்களில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைக்கு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.