உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆம் ஆத்மி, கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில தேர்தல்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இந்தச்சூழலில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் என்பவரை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து வக்கீல் அமித் பலேகர் என்பவரை கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார்.
அமித் பலேகர் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் , கடந்த அக்டோபர் மாதத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் பலேகர் கோவாவின் மக்கள்தொகையில் சுமார் 35 சதவீதத்தைக் கொண்ட பண்டாரி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். முதல்வர் வேட்பாளராக அமித் பலேகரை அறிவிக்கையில், கோவா மக்கள்தொகையில் பண்டாரி சமூகத்தை சேர்ந்தவர்கள் 35 சதவீதம் பேர் இருந்தும், அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே இதுவரை முதல்வராக இருந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.