ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
பான் கார்டு மோசடியால் வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நோக்கில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்படாது என அறிவிக்கப்பட்டது. இவை இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்தபோதும், பலர் இந்த இணைப்பை மேற்கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் மார்ச் 31, 2020 க்குள் பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.