உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் திருப்பங்கள், தேர்தல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளன.
நேற்று காலை அகிலேஷ் யாதவ், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நேற்று மாலை உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ கூட்டணியை பாஜக அறிவித்தது.
இந்தநிலையில் லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமாஜ்வாடி பென்ஷன் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கும் வருடந்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முந்தைய சமாஜ்வாடி ஆட்சியில், அத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது எனவும் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.