Skip to main content

10க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், கூட்டம் தொடங்கியது முதலே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரண்டுமுறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், அவை மீண்டும் கூடியதும் அமளி நீடித்தது. இதனால் மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து முழக்கத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ், சிபிஎம்-மைச் சேர்ந்த எலமரம் கரீம், சிபிஐயைச் சேர்ந்த பினோய் விஸ்வம், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த டோலா சென், சாந்தா சேத்ரி, சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் ஆகிய மாநிலங்களவை எம்.பிக்கள் 12 பேர் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவை நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பா.ஜ.க. எம்.பி!

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
BJP MP joined the Congress party 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரிஜேந்திர சிங் ஆவார். இவர் இன்று (10.03.2024) பா.ஜ.க.வில் இருந்து விலகினர். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

இது குறித்து பிரிஜேந்திர சிங் கூறுகையில், “அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகினேன். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிவிட்டேன்” எனத் தெரிவித்தார். பா.ஜ.க. எம்.பி ஒருவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.