Skip to main content

திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா?  மேலிட தலைவர்கள் ஆலோசனை! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

ddd

 

தேர்தல் பணிகளில் திமுக ஹை ஸ்பீடில் சென்றதைக் கணித்தபோது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிடும் கட்சியாக திமுக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  

 

ஆனால், கூட்டணிக்குள் நடக்கும் எண்ணிக்கை இழுபறிகள், தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டுக்கொடுத்தல், போட்டியிடும் சின்னம் தொடர்பான விவகாரத்தில் அதிருப்தி என மீண்டும் பிரச்சனைகள் வெடித்திருப்பதால், தோழமைக் கட்சிகள் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. 

 

இந்த நிலையில், திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், அக்கட்சி எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்க அறிவாலயம் மறுத்துவிட்டது. அதேசமயம், “பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது” எனச் சொல்லி வந்த காங்கிரஸின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பந்து திமுகவிடம் இருக்கிறது. இனி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என நேற்று (03.03.2021) பேட்டியளித்தார். 
                 

ddd

 

இதற்கிடையே, காங்கிரசுக்குக் கொடுக்கப்படுவதாக திமுக சொல்லும் சீட் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக இன்று கூட்டியுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து விவாதிப்பதற்காக காங்கிரசின் மேலிட தலைவர்களான கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங் இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் ராகுல்காந்தி. 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், குறைவான சீட்டுகள் ஒதுக்குவதாகச் சொல்லும் திமுக கூட்டணிக்குள் நீடிக்கலாமா? வேண்டாமா? அதிக சீட்டுகள் கேட்டு வலியுறுத்தலாமா? வேண்டாமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கதர் சட்டையினரின் கருத்துக்களைக் கேட்டு முடிவு செய்யவிருக்கிறது சத்தியமூர்த்தி பவன். அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டதால், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 

 

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, “அதிக சீட்டுகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் மனநிலை. திமுக கொடுக்கும் சீட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம்; ஏனெனில், திமுக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவர் என்பது தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. தலைவர்களா? தொண்டர்களா? யாருடைய கருத்துக்களை மேலிட தலைவர்கள் ஏற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்பது தெரியவரும்” என்று சொல்கின்றனர். 

 

இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் தலைமைக்கு அழைப்பு விடுத்துள்ளது அறிவாலயம்! எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதில் எப்பவுமே இப்படித்தான் இருக்கும். அதனைப் பேசி தீர்த்துக்கொள்வோம். மற்றப்படி கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்கின்றனர் அறிவாலயத்தில் உள்ளவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்