Skip to main content

முட்டாள்தனமான, மூர்க்கத்தனமான ஆக்‌ஷன்! இந்து என்.ராம்  ஆவேசம்

Published on 11/10/2018 | Edited on 12/10/2018
ரா

 

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு   10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில்,  சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் இன்று  11.10.2018 வியாழக்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.   ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து உரையாற்றுகிறார். முரசொலி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனசக்தி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்து என்.ராம், மணிச்சுடர் சார்பில் கே.ஏ.எம்.அபுபக்கர், மக்கள் உரிமை சார்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, தீக்கதிர் பொறுப்பாசிரியர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்றினார்கள். 

 

pt

 

இக்கூட்டத்தில் இந்து என்.ராம் பேசியபோது ஆளுங்கட்சியின் அராஜக நடவடிக்கைக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினார்.


‘’நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட அன்றை தினம் காலையில் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் 5 பேரை காலை விருந்துக்கு அழைத்திருந்தார் ஆளுநர்.  நான் உட்பட ஐந்து பேர் காலை 9.30 மணிக்கு விருந்துக்கு சென்றோம்.   இதற்கு முன்னால் கோபால் கைது செய்யப்பட்டது எங்களுக்கு தெரியாது.  வாட்ஸ் -அப் மெசேஜ் பார்க்காதது அதற்கு காரணம்.   அந்த விருந்தின்போது இந்த கைது விவகாரம் குறித்து ஆளுநரோ, ஆளுநர் மாளிகையில் இருந்த அதிகாரிகளோ எங்களுக்கு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.   வேறு விசயங்களை பற்றியே பேசினார்கள்.  விருந்தில் பலரக உணவுகள் பரிமாறப்பட்டன.  அந்த விருந்தை முடித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது,  மேல் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து,  124 பிரிவில் கோபாலை கைது செய்துவிட்டார்கள் என்று சொன்னார்.   124 பிரிவைப்பற்றி நாங்கள் இதுவரை கவலைப்பட்டதுமில்லை.  அதுபற்றி கேள்விப்பட்டதுமில்லை.    இதற்கு முன்னாள் அதை பயன்படுத்தாமல் இருந்ததே அதற்கு காரணம்.  

 

அதன்பின்னர் எனக்கு ஞாபகம் வந்தது.   ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது,   அதற்கு எதிராக ராஜ்பவனில் இருந்து, ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.   ஆர்ப்பாட்டம் நடத்தினால் 124 பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை வந்தது.     இந்த நிலையை எடுத்தது ஒரு மோசமான ஒரு முன் உதாரணம்.  இதையடுத்து அதே யுக்தியை இப்போதும் கையாண்டிருக்கிறார்கள்.   

 

rm

 

எழும்பூர் 13வது நீதிமன்றத்தின் மாஜிஸ்ட்ரேட் கோபிநாத்தை பாராட்ட வேண்டும்.  வழக்கமாக இப்படி ஒரு  வழக்கை போலீஸ் கொண்டு வந்தால் நீதிமன்றக்காவல் கொடுத்துவிடுவார்கள்.  ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்திற்கு சென்றாலும் உடனே கிடைக்காது.    ஆனால் மாஜிஸ்ட்ரேட் கோபிநாத், இரு தரப்பு வாதத்தையும் மிகச்சரியாக கேட்டு தீர்ப்பு கூறினார்.   4 நேரம் நடந்த விவாதத்தின்போது அங்கே இருந்த என் கருத்தையும் பதிவு செய்த அனுமதித்தார் மாஜிஸ்ட்ரேட்.   124 சட்டப்பிரிவுக்கும் நக்கீரன் இதழில் வந்த கட்டுரைக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.   இந்த கட்டுரைக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் எப்படி கைது செய்யலாம் என்று நினைத்தார்கள் தெரியவில்லை.   இந்த பிரிவின் கீழ் கைது செய்ததோடு அல்லாமல்,   அடுத்தகட்ட நடவடிக்கையாக நீதிமன்றக்காவல் அளித்தால் இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும்.  ஜனநாயக எதிரிகள் இதைப்பயன்படுத்தி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்தை முழுவதுமாக நசுக்கிவிடுவார்கள் என்று எனது கருத்தை கூறினேன்.  அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

 

  புலனாய்வு செய்து தகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட இந்த கட்டுரையினால் அவதூறு வழக்கு கூட தொடரமுடியாது.  அப்படி இருக்கையில் எப்படி 124 வழக்கு பாயும்.   இது முட்டாள்தனமான, மூர்க்கத்தனமான ஒரு ஆக்‌ஷன் என்றுதான் இதை கருதவேண்டும்.

 

 வலுவான ஆளுமை மிக்க ஒரு தலைவராக இருந்த ஜெயலலிதா கூட நூறுக்கு மேல் அவதூறு வழக்கு தொடருவாரே தவிர இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது கிடையாது.   அவருக்கு கூட இப்படி ஒரு ஐடியா வரவில்லை.   ஒரு பலகீனமான ஆட்சி எதற்கு இப்படி ஒரு வேலையைச்செய்கிறது.   அவர்களுக்குள்ளாகவே சண்டை நீடிக்கிறது. வரப்போகிற தேர்தலை அவர்களால் எதிர்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது.  அப்படி இருக்கும்போது எப்படி இதுமாதிரி நடவடிக்கையில் இறங்கினார்கள் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி’’ என்று பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்