சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை டி.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், சசிகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய தி.மு.க.வை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட, ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்" இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.