தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார் ஆர்.என். ரவி. அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநராக பதவியேற்றதும் மாமல்லபுரம் சென்று கலைக் கோயில்கள் மற்றும் சிற்பங்களைக் கண்டு ரசித்தார்.
அவரது ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்புகள் மீது கடந்த 3 நாட்களாக கவனம் செலுத்தினார் ஆர்.என். ரவி. நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்ட மசோதா, 700 சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆராய்ந்தார் ஆளுநர். அது குறித்த பல சந்தேகங்களை அரசு அதிகாரிகளிடம் விவாதிக்கவும் செய்தார் அவர்.
இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை ராஜ்பவனுக்கு அழைத்து விவாதித்தார். அந்த சந்திப்பில், 700 சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தனக்குள்ள சந்தேகங்களை டிஜிபியிடம் கேட்டதாக தெரிகிறது. ஒவ்வொரு சிறைவாசியும் எந்தப் பின்னணியில் விடுதலை செய்யப்பட முடிவு எடுக்கப்பட்டது? அவர்கள் மீதான குற்றங்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை உள்ளிட்ட பல விபரங்களை டிஜிபியிடம் ஆளுநர் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கு குறித்த பல கேள்விகளையும் அவர் கேட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று (23.09.2021) காலை டெல்லிக்குப் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. சென்னை விமானநிலையத்திலிருந்து காலை 7.15க்கு புறப்பட்ட விஷ்தாரா விமானத்தில் டெல்லிக்குச் சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த டெல்லி பயணத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.